பத்ர் தரும் படிப்பினை - மஷுரா
பத்ர் தரும் படிப்பினை 2
மஷுரா
மார்க்க விவகாரங்களில் ஆலிம்களுடனும், உலக விவகாரங்களில் குறித்த துறையில் ஆற்றல் உள்ளவர்களிடமும் ஆலோசனைச் செய்வது அழ்ழாஹ்வின் உதவியும், உலகியல் விவகாரங்களில் நன்மை நடப்பதற்கும் வாய்ப்பை ஏற்படுத்தும் .
நபி ஸல்லழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பத்ர் யுத்தத்திற்கு முன்னர் ஸஹாபாக்களிடம் ஆலோசனைக் கேட்டார்கள். தாம் விரும்பும் முடிவை சில ஸஹாபாக்கள் முன் வைத்தும்கூட அவர்கள் திடீர் முடிவு செய்யாது அன்ஸாரிகளின் முடிவை அறியும் ஆர்வத்தில் தொடர்ந்தும் ஆலோசனைச் செய்தார்கள். அவர்களின் ஆலோசனையும் சாதகமாக அமைந்த பின்னரே யுத்தம் செய்யும் முடிவை எடுத்தார்கள். இது ஆலோசனை செய்வதின் அவசியத்தை உணர்த்துகின்றது.
மேலும் பத்ர் களத்தில் நடந்த இன்னொரு சம்பவமும் மஷுராவின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.
நபி ஸல்லழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘பத்ர்’ களம் சென்று மதீனா பகுதிக்கு நேராக இருக்கும் முதலாவது கிணற்றுக்கருகில் தமது கூடாரங்களை அமைத்துக் கொள்ளுமாறு உத்தரவிட்டார்கள்.
அப்போது ஹுபாப் இப்னுல் முன்தீர் ரழியழ்ழாஹு அன்ஹு அவர்கள், ‘அழ்ழாஹ்வின் தூதரே! இந்த இடத்தில் நாம் கூடாரமிட வேண்டும் என்பது அழ்ழாஹ்வின் கட்டளையா? அப்படியாயின் நாம் இதை விட்டும் ஒரு அடி முன்னாலோ, பின்னாலோ நகர மாட்டோம்! அல்லது உங்களது சொந்த அபிப்பிராயப்படி நீங்கள் தீர்மானித்த இடம் என்றால், என்னிடம் மாற்று அபிப்பிராயம் உள்ளது!’ என்றார்.
நபி ஸல்லழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது சொந்த முடிவு என்றதும், ‘அழ்ழாஹ்வின் தூதரே! இதற்குப் பின்னரும் தொட்டிகள் உள்ளன. நாம் முன்னேறிச் சென்று அவற்றையும் எம் வசப்படுத்திக் கொள்ள வேண்டும். அதைத் தாண்டியிருக்கும் சிறிய நீர் தொட்டிகளிலிருந்து தண்ணீரை நாம் எடுத்துக் கொள்வோம். அப்போது நாம் தண்ணீர் குடிக்க அவர்கள் தாகத்தோடு போராடுவார்கள்’ என்று தனது அபிப்பிராயத்தைக் கூற அது போர்த் தந்திரத்திற்கும், எதிரிகளைப் பலவீனப்படுத்தவும் ஏற்ற யுக்தியாகத் திகழ்ந்ததால் நபி ஸல்லழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது முடிவை மாற்றி அவர் கருத்துப்படி செயற்பட்டார்கள்.
[ஸீரதுன்னபவிய்யா/ தபகாத்]
"நான் அழ்ழாஹ்வின் ரஸுல்; நான் இட்டதுதான் கட்டளை" என்று நபி ஸல்லழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறவில்லை! நபி ஸல்லழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுய கௌரவம் பாராது அடுத்தவர் கருத்தையும் மதித்து நடந்ததால், முஸ்லிம்களுக்கு நன்மை விளைந்தது.
Comments
Post a Comment