ஹன்ழலா இப்னு அபூ ஆமிர் றழியழ்ழாஹு அன்ஹு
மலக்குமார்கள் குளிப்பாட்டிய
ஹன்ழலா இப்னு அபூ ஆமிர் றழியழ்ழாஹு அன்ஹு
- மதீனாவைச் சேர்ந்தவர்.
- "அஸ்ஹாபுஸ் ஸுஃப்பா" எனும் திண்ணைத் தோழர்களில் ஒருவர்.
- திருமணம் முடித்து அடுத்த நாளான உஹதுடைய தினத்தில் வீரதீரமாகப் போரிட்டு ஷஹீதானவர்கள்.
ஹன்ழலா றழியழ்ழாஹு அன்ஹு அவர்கள் திருமணம் முடித்து, முதலிரவையும் சந்தோஷமாகக் கழித்து உறங்கிக் கொண்டிருக்கும்போது, நபி ஸழ்ழழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உஹத் போருக்கு அழைப்பு விடுக்கும் பறை ஓசையைக் கேட்டு திடுக்கிட்டு விழித்தார்.
உடலுறவுக்குப்பின் ஃபர்ழான குளிப்பைக் குளிப்பதற்கும் அவருக்கு நேரமில்லை; அவகாசமில்லை. ஃபர்ழான குளிப்பைக் குளித்தால் நேரமாகி விடும் என்பதனால் குளிக்காமலேயே கடகடவென கவசம் தரித்தார்; ஆயுதங்களைத் தூக்கிக் கொண்டார்; போர்களத்திற்குப் பாய்ந்தோடினார். வெற்றி வாகை சூடி விட்டு திரும்புவார்கள் என எண்ணி அவரது மனைவியும் சந்தோஷமாக வழியனுப்பிவைத்தார்.
ஹன்ழலா றழியழ்ழாஹு அன்ஹு அவர்கள் களத்தில் குறிவைத்தது, குறைஷிப் படையின் தலைவன் அபூஸுஃப்யானை. படையின் தலைவன் என்பதால் அபூஸுஃப்யானைச் சுற்றி பாதுகாப்பு வளையம் பலமாய் இருந்தது. தவிர அபூஸுஃப்யான் குதிரையில் அமர்ந்து போரிட்டுக் கொண்டிருக்க, ஹன்ழலா றழியழ்ழாஹு அன்ஹு அவர்களிடம் குதிரையும் இல்லை; கழுதையும் இல்லை. வெறும் காலாட்படை வீரர் அவர். ஆனால் எந்த அசௌகரியமும் ஒரு பொருட்டே இல்லை என்று சுழன்று சுழன்று அபூஸுஃப்யானை நெருங்கிவிட்டார். தம் வாளைச் சுழற்றி அபூஸுஃப்யானை வெட்டி வீழ்த்த முயல மயிரிழையில் உயிர் தப்பினார் அபூஸுஃப்யான்.
தவறிப்போனது அந்த வீச்சு. அப்பொழுது பக்கவாட்டிலிருந்து வந்த ஷத்தாத் இப்னு அஸ்வத் என்பவன் தன் ஈட்டியை ஹன்ழலா றழியழ்ழாஹு அன்ஹு அவர்களின் உடலில் செருக அது மறுபுறம் வெளிவந்தது. அப்படியும் விடாது உடலில் குத்திட்டு நிற்கும் ஈட்டியும், வழிந்தோடும் குருதியுமாய் எதிரியைத் துரத்தினார் ஹன்ழலா றழியழ்ழாஹு அன்ஹு அவர்கள். ஆனால் மீண்டும் எதிரியின் ஈட்டி அவரைத் தாக்க வீர மரணமடைந்தார் ஹன்ழலா றழியழ்ழாஹு அன்ஹு அவர்கள்.
ஸஹாபாக்கள் மட்டுமல்ல நபி ஸழ்ழழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் கண் கலங்கிவிட்டார்கள். ஹன்ழலா றழியல்லாஹு அன்ஹு அவர்களைக் குளிப்பாட்டி அடக்கம் செய்ய ஸஹாபாக்கள் முன்வந்த போது, நபி ஸழ்ழழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "வேண்டாம்!" என்று தடுத்துவிட்டு எங்கோ தூரத்தில் கண் இமை சிட்டாமல் பார்த்தவாறு இருந்தார்கள். அந்த இடத்தில் ஹன்ழலா றழியல்லாஹு அன்ஹு அவர்களின் உடல் மட்டுமே இருந்தது. இறந்து போன உடலையே பார்த்தவாறு இருந்தார்கள். பிறகு நபி ஸழ்ழழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "அதோ பாருங்கள்! வானத்தில் இருந்து மலக்குகள் இறங்கி ஹன்ழலாவை குளிப்பாட்டிக் கொண்டிருக்கின்றார்கள் அதனால் தான் உங்களுக்கு அவரைக் குளிப்பாட்ட வேண்டாம் என்று தடுத்தேன்" என்று கூறினார்கள்.
ஹன்ழலா இப்னு அபூ ஆமிர்
கஸீலுல் மலாயிக்கா
றழியழ்ழாஹு அன்ஹு!
அஸீம் ழாஹிர்
கொழும்பு
Comments
Post a Comment