ஃகப்பாப் இப்னு அரத் றழியழ்ழாஹு அன்ஹு..


 ஃகப்பாப் இப்னு அரத் றழியழ்ழாஹு அன்ஹு


- இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்கு முதல் உம்மு அன்மாரின் கொல்லன் பட்டறையில் வாள் செய்து கொண்டிருந்தவர்கள்.


- இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஆறாவது நபர். "ஃகப்பாப் ஒரு காலத்தில் இஸ்லாத்தில் ஆறில் ஒரு பங்கு" என்று பெருமையாகச் சொல்லப்பட்டது.


- ஃகப்பாப் றழியழ்ழாஹு அன்ஹு அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதற்காக கொடூரமான முறையில் வேதனைச் செய்யப்பட்டார்கள்.


• அடித்தார்கள்; உதைத்தார்கள்.

• பட்டறையில் இருந்த இரும்புச் சாமான்களை எடுத்துத் தாக்க ஃகப்பாப் றழியழ்ழாஹு அன்ஹு அவர்கள் சுயநினைவற்றுக் கீழே விழுந்தார்கள்.

• காஃபிர்கள் கற்களை நெருப்பில் இட்டுச் சுடுவார்கள். தீ கொழுந்து விட்டு எரிந்து, அந்தக் கற்கள் நெருப்புத் துண்டுகளாய் ஆகும்வரைக் காத்திருப்பார்கள். பின்னர் ஃகப்பாப் றழியழ்ழாஹு அன்ஹு அவர்களின் உடைகளைக் கழற்றி விட்டு, அந்த நெருப்புக் கங்குகளின்மேல் அவர்களைப் போட்டு மேலும் கீழுமாய் இழுப்பார்கள். அவர்களின் முதுகு சதைத் துண்டுகள் அந்தத் தீயினால் வெந்து விழும். அவர்களின் காயத்திலிருந்து வழிந்து விழும் நீரினால் அந்தத் தீ அணையும்.

• எஜமானி உம்மு அன்மார் பட்டறைக்கல்லில் இருந்து பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியொன்றை எடுத்து வந்து ஃகப்பாப் றழியழ்ழாஹு அன்ஹு அவர்களின் தலையில் தினமும் சூடு போட்டாள். அதனால் சதைப் பொரிக்க ஆரம்பிக்கும். அதற்கு மேல் சுயநினைவு தங்க மறுத்து மயக்கமுறும் நிலையில் ஃகப்பாப் றழியழ்ழாஹு அன்ஹு அவர்கள் உம்மு அன்மாரிற்கு எதிராக துஆக் கேட்க அழ்ழாஹ்வும் துஆவை ஏற்றுக் கொண்டான்.


உம்மு அன்மாருக்கு திடீரென்று தலைவலியொன்று உண்டானது. அது அதிகமாயிற்று. பிறகு தீவிரமாயிற்று. மிகத் தீவிரமாயிற்று. யாரும் அப்படியொன்று கேள்விப்பட்டிராத தலைவலி. வலியின் கொடுமையால் அவள் கத்துவது நாய் ஊளையிடும் சப்தம் போலிருந்தது. மிரண்டு அவளுடைய மகன் வைத்தியர் மாற்றி வைத்தியர் தூக்கிக் கொண்டு ஓட யாருக்கும் தலைவலிக் காரணம் புரியவில்லை. "சூட்டுக்கோல்" வைத்திய முறை அக்காலத்தில் காணப்பட்ட ஒரு விசேஷமான மருத்துவம். அதைத்தான் கடைசியில் ஒரு வைத்தியர் பரிந்துரைத்தார். அவளுக்குத் தலையில் தினமும் சூட்டுக்கோலால் சூடு இடப்பட்டு அப்படியே மரணித்தாள்.


- குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் அதனை ஓதிப் பழகிய கெட்டிக்காரர். புத்திக் கூர்மையாளர்.


- அப்துழ்ழாஹ் இப்னு மஸ்ஊத் றழியழ்ழாஹு அன்ஹு அவர்கள் குர்ஆன் சம்பந்தமாக ஃகப்பாப் றழியழ்ழாஹு அன்ஹு அவர்களுடன் ஆலோசனைச் செய்வார்கள்.


- உமர் இப்னு ஃகத்தாப் றழியழ்ழாஹு அன்ஹு அவர்கள் கோபத்துடன் வாளை உருவிக் கொண்டு தன் வீட்டிற்குச் செல்லும்போது உமர் றழியழ்ழாஹு அன்ஹு அவர்களின் சகோதரி ஃபாத்திமா பின்த் ஃகத்தாப் மற்றும் அவரது கணவர் ஸஈத் இப்னு ஸைத் றழியழ்ழாஹு அன்ஹுமா ஆகிய இருவருக்கும் குர்ஆனை ஓதிக் கொடுத்துக் கொண்டிருந்தவர்கள்.


-

- وَلَا تَطْرُدِ الَّذِيْنَ يَدْعُوْنَ رَبَّهُمْ بِالْغَدٰوةِ وَالْعَشِىِّ يُرِيْدُوْنَ وَجْهَهٗ‌  


என்ற ஸுறா அன்ஆமின் ஆயத் இறக்கப்பட காரணமாகவிருந்த மூன்று ஸஹாபாக்களுள் ஒருவர். அந்த ஆயத் இறங்கிய நிமிடத்திலிருந்து ஃகப்பாப் றழியழ்ழாஹு அன்ஹு அவர்கள் உட்பட அந்த மூவரையும் கண்டுவிட்டால் நபி ஸழ்ழழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மேலும் அன்பாய் நடாத்த ஆரம்பித்தார்கள். தனது விரிப்பை அவர்களுக்கு விரித்து, அவர்களது தோள்களைத் தட்டி, "என் றப்பு சிறப்பிக்கும்படி பரிந்துரைத்தவர்களுக்கு நல்வரவு உரித்தாகுக" என்று கூறுவார்கள்.


- பத்ர் ஸஹாபி.


- மிக நீண்ட காலம் உயிர் வாழ்ந்த ஸஹாபி. எந்தளவுக்கென்றால் ஃகுலஃபாஉர் ராஷிதீன்களின் ஆட்சியையும் கண்டுவிட்டு மரணித்தார்கள்.


- உமர் இப்னு ஃகத்தாப் மற்றும் உஸ்மான் இப்னு அஃப்பான் றழியழ்ழாஹு அன்ஹுமா ஆகிய இருவரின் ஆட்சிக் காலத்தில் அரச கருவூலத்திலிருந்து நிறைய பணம் ஃகப்பாப் றழியழ்ழாஹு அன்ஹு அவர்களுக்குக் கிடைத்தது. அதன் மூலம் கூஃபாவில் ஒரு வீடு கட்டி நாணயங்கள்,பணம் போன்றவற்றை வெளிப்படையாகவே மக்கள் பார்வைக்கு வைத்து "தேவையானவர்கள் தேவையானவைகளை எவ்வித அனுமதியுமின்றி எடுத்துச் செல்லட்டும்" என்று கூறினார்கள்.


- ஃகப்பாப் றழியழ்ழாஹு அன்ஹு அவர்களுக்கு இறுதிக் காலத்தில் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. அதன் நோவு மிகவும் கடினமானதாயிருந்தது. எந்த அளவென்றால், "நபி ஸழ்ழழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணத்தை வேண்டிப் பிரார்த்தனைச் செய்ய வேண்டாமென எங்களுக்குத் தடை விதித்திருக்காவிட்டால் அதை வேண்டி நான் பிரார்த்தனைப் புரிந்திருப்பேன். அந்த அளவுக்கு இப்போது நான் நோயினால் சிரமப்படுகிறேன்" என்று அடிக்கடி கூறிக் கொண்டிருந்தார்கள்.


- ஸக்கறாத்தில் சூழ்ந்திருந்தவர்களிடம் எண்பதாயிரம் தீனார்களையும், தனது வீட்டையும் தேவையானவர்களுக்கு ஸதகா செய்துவிடும்படி பணித்து விட்டு மரணித்தார்கள்.


ஃகப்பாப் இப்னு அரத்

றழியழ்ழாஹு அன்ஹு!


அஸீம் ழாஹிர்

கொழும்பு

Comments

Popular posts from this blog

ஹுதைஃபா இப்னு யமான் றழியழ்ழாஹு அன்ஹு (ஸாஹிபுஸ் ஸிர்)

ஸைத் இப்னு ஸாபித் றழியழ்ழாஹு அன்ஹு

Abdullah Ibnu Mas'ood (RA) அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு