பூமி விழுங்கிய ஃகுபைப் இப்னு அதீ, ஆண் தேனீக்கள் பாதுகாத்த ஆஸிம் இப்னு ஸாபித் றழியழ்ழாஹு அன்ஹுமா


Click Here & Join lovislam Telegram Group


பூமி விழுங்கிய ஃகுபைப் இப்னு அதீ


ஆண் தேனீக்கள் பாதுகாத்த ஆஸிம் இப்னு ஸாபித் 


றழியழ்ழாஹு அன்ஹுமா


- இருவரும் மதீனாவைச் சேர்ந்தவர்கள்

- இருவரும் "ரஜீஃ" சம்பவத்தில் கொல்லப்பட்டவர்கள்.


ஹிஜ்ரி 4, ஸஃபர் மாதம் அழல் மற்றும் காரா வமிசத்தைச் சேர்ந்த ஒரு கூட்டம் நபி ஸழ்ழழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்களைச் சந்தித்து தங்களில் பலர் இஸ்லாத்தைத் தழுவ விரும்புகின்றனர். அவர்களுக்கு இஸ்லாமையும், குர்ஆனையும் கற்றுத்தர தங்களுடன் சிலரை அனுப்புமாறு கோரினர். அவர்களின் கோரிக்கையை ஏற்று பத்து நபர்களை நபி ஸழ்ழழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனுப்பினார்கள். குழுவுக்குத் தலைவாரக ஆஸிம் இப்னு ஸாபித் றழியழ்ழாஹு அன்ஹு அவர்கள் இருந்தார்கள்.


இவர்களை அழைத்துக் கொண்டு "ரஜீஃ" என்ற இடத்தை அம்மக்கள் அடைந்தனர். இவ்விடம் ராபிக் மற்றும் ஜித்தாவிற்கு மத்தியில் ஹிஜாஸ் பகுதிக்கு அருகில் ஹுதைல் வமிசத்திற்குச் சொந்தமான நீர் நிலையாகும். இங்கு வந்தவுடன் லஹ்யான் கிளையினரை இவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராகத் தூண்டினர். லஹ்யான் கிளையைச் சோந்த நூறு அம்பெறியும் வீரர்கள் காலடி அடையாளங்களை வைத்து இவர்கள் இருக்குமிடம் வந்தடைந்தனர். தங்களுக்கு மோசடி நடந்துவிட்டது என்று தெரிந்து கொண்ட நபித்தோழர்கள் "ஃபத்ஃபத்" என்ற மலைக்குன்றின் மீது ஏறிக்கொண்டனர். அங்கு வந்த எதிரிகள் “நாங்கள் உங்களைக் கொலைச் செய்யமாட்டோம் என்ற உறுதிமொழி தருகிறோம், இறங்கி வாருங்கள்” எனக் கூறினர். ஆனால், ஆஸிம் றழியழ்ழாஹு அன்ஹு அவர்கள் இறங்கி வர மறுத்துவிட்டு, தங்களது தோழர்களுடன் சேர்ந்து எதிரிகளை எதிர்த்தனர். ஆனால், எதிரிகள் நபித்தோழர்களில் ஏழு நபர்களைக் கொன்றுவிட்டனர். மீதம் ஃகுபைப், ஸைத் இப்னு தஸின்னா இன்னும் ஒருவர் றழியழ்ழாஹு அன்ஹும் ஆகிய மூவர் மட்டும் இருந்தனர். அவர்களிடம் இந்த எதிரிகள் கொல்லமாட்டோம் என மீண்டும் வாக்களித்தனர். அம்மூவரும் அவர்களிடம் இறங்கிவரவே தங்களின் வாக்குக்கு மாறுசெய்து வில்லின் நரம்புகளால் அவர்களைக் கட்டினர். 


அந்த மூன்றாவது நபித்தோழர் “இது இவர்களின் முதல் மோசடி” எனக் கூறி அவர்களுடன் செல்வதற்கு மறுத்தார். அவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் அவர் வர மறுக்கவே அவரைக் கொன்றுவிட்டனர். அதற்கு பின் ஃகுபைப், ஸைத் றழியழ்ழாஹு அன்ஹுமா ஆகிய இருவரையும் மக்காவிற்கு அழைத்து வந்து அங்கு அவர்களை விற்றனர். இவ்விருவரும் பத்ர் போரில் மக்காவின் தலைவர்களில் சிலரை கொன்றிருந்தனர். ஃகுபைப் றழியழ்ழாஹு அன்ஹு அவர்களை வாங்கியவர்கள் சில காலம் வரை அவர்களைச் சிறை வைத்திருந்தனர். பின்பு அவரை கொன்றுவிட முடிவு செய்து மக்காவின் புனித எல்லைக்கு வெளியில் அழைத்து சென்றனர். அங்கு அவரைக் கழு மரத்தில் ஏற்றி கொன்றுவிடலாம் என முடிவு செய்தனர். அப்போது ஃகுபைப் றழியழ்ழாஹு அன்ஹு அவர்கள், “நான் இரண்டு ரக்அத் தொழுதுகொள்ள என்னை விடுங்கள்” என்று கேட்க அவர்களும் அனுமதித்தனர். தொழுது முடித்தபின், “அழ்ழாஹ்வின் மீது ஆணையாக! எனக்கு நடுக்கம், பயம் ஏற்பட்டுவிட்டது என்று நீங்கள் கூறமாட்டீர்கள் என்றிருப்பின் நான் மேலும் தொழுதிருப்பேன் என்று கூறிய பிறகு, அல்லாஹ்வே! இவர்களை எண்ணிக்கொள்! இவர்களை தனித்தனியாக பிரித்து கொன்றுவிடு! இவர்களில் எவரையும் மீதம் விடாதே!” என்று கூறி பின்வரும் கவிதையை படித்தார்கள்.


“எதிரி இராணுவத்தினர் என்னை சூழ்ந்தனர்; 

தங்கள் இனத்தவரை எனக்கெதிராக ஒன்றிணைத்தனர்;

ஒவ்வொரு சாதியையும் வருமாறு அழைத்தனர்;

தங்களின் பெண்கள், பிள்ளைகள் என அனைவரையும் இணைத்தனர்;

ஒரு நீண்ட உறுதிமிக்க கழுமரத்திற்கருகில் நான் நிறுத்தப்பட்டேன்;

எனது கஷ்டம், தனிமை, அந்நியம்

மேலும் நான் இறக்குமிடத்தில் சூழ்ந்துள்ள இராணுவம்

இவையனைத்தையும் அழ்ழாஹ்விடமே முறையிடுகிறேன்;

இறைவனை நான் நிராகரிக்கவேண்டுமென பெரிதும் விரும்பினர்;

(எங்ஙனம் அதனைச் செய்வேன்)

மரணம் எனக்கு அதைவிட மிக எளிது;

என் கண்கள் அழுகின்றன; நீர் ஒட இடமில்லை;

எனக்கிழைத்த துன்பத்தைத் தாங்க 

அர்ஷின் அதிபதி எனக்கு பொறுமையளித்தான்;

அணு அணுவாக அவர்கள் என்னை கொல்கின்றனர்;

எனக்கு மோசமான உணவு வழங்கப்பட்டது;

நான் முஸ்லிமாகக் கொலையுறுவதால்

மரணம் ஒரு பொருட்டல்லவே!

எந்த பகுதியில் கொலையுண்டாலும்

அழ்ழாஹ்வின் பாதையில் என் மரணம் துயில் கொள்ளுமே! 

அது, அல்லாஹ் நாடினால், துண்டு துண்டான

சதைகளின் நாள, நரம்புகளிலெல்லாம் அருள்வளம் பொழிவான்”


இந்தக் கவிதைகளைச் செவிமடுத்தப் பின் அபூஸுஃப்யான், ஃகுபைப் றழியழ்ழாஹு அன்ஹு அவர்களிடம், “உன்னை உனது குடும்பத்தாரிடம் விட்டுவிடுகிறோம். ஆனால், முஹம்மதை நாங்கள் கொன்று விடுகிறோம். இது உனக்கு விருப்பமா? என்று கேட்டார். அதற்கு, “நான் எனது குடும்பத்தில் இருக்க, நபி ஸழ்ழழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நோவினை அளிக்கும் விதமாக அவருக்கு முள் குத்துவதை கூட நான் விரும்பமாட்டேன்” என ஃகுபைப் றழியழ்ழாஹு அன்ஹு அவர்கள் பதிலளித்தார்கள். இதற்குப் பின் அவரை கழு மரத்தில் ஏற்றிக் கொன்றனர். பத்ர் போரில் ஃகுபைப் றழியழ்ழாஹு அன்ஹு அவர்கள் ஹாரிஸை கொன்றதால் அதற்குப் பதிலாக அவனின் மகன் உக்பா என்பவன் ஃகுபைப் றழியழ்ழாஹு அன்ஹு அவர்களைக் கொன்றான். பிறகு ஃகுபைப் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் திருமுகத்தை கிப்லா அல்லாத திசையில் திருப்பி வைத்தார்கள். பின்னர் வந்து பார்த்தால் அந்த முகம் கிப்லாவை முன்னோக்கி இருக்கக் கண்டார்கள்.


தொடர்ந்து பல முறை முகத்தை வேறு திசையில் திருப்பித் திருப்பி வைத்துப் பார்த்தார்கள். பின்னர் அவர்கள் தங்கள் இயலாமையை ஒப்புக் கொள்ள வேண்டிவந்தது. இருந்த மேனிக்கு அப்படியே விட்டு விட்டார்கள். ஃகுபைப் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் உடல் கழுவில் தொங்கிக் கொண்டிருந்தது. அதை பாதுகாப்பதற்கு நாற்பது வீரர்கள் அதை சுற்றி நின்று கொண்டிருந்தார்கள். மதீனாவில் நபி ஸழ்ழழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "யார் அந்த உடலை கீழே இறக்கிக் கொண்டு வருவாரோ அவருக்கு சுவனம் உண்டு" என்று சுபச் செய்தி சொன்னார்கள்.


இதை கேட்ட ஸுபைர் இப்னு அவ்வாம் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் "நானும் எனது தோழர் மிக்தாத் இப்னு அஸ்வத் றழியல்லாஹு அன்ஹு அவர்களும் இதற்குத் தயார்" என அறிவித்து பகலில் ஒளிந்து இரவில் நடந்து கழுவேற்றப்பட்ட "தன்ஈம்" என்ற இடத்துக்கு வந்து சேர்ந்தார்கள். அங்கே கழுவேற்றப்பட்ட பலகையை சுற்றி பாதுகாப்புக்கு நின்ற நாற்பது வீரர்களும் போதையில் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அவ்விரு ஸஹாபாக்களும் துணிச்சலுடன் அப்பலகையிலிருந்து ஃகுபைப் றழியல்லாஹு அன்ஹு அவர்களை இறக்கினார்கள். அப்போது அந்த புனிதமான உடல் புதிதாக உடல் சிதையாமல் இணைந்து இருந்தது. கொல்லப்பட்டு அதுவரை நாற்பது நாளாகியும் அதில் ஒரு மாறுதலும் ஏற்படவில்லை. அவர்களுடைய கை காயத்தின் மீது இருந்தது. நிறம் இரத்த நிறமாக வாடை கஸ்தூரி வாடையாக இருந்தது. அதை ஸுபைர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் குதிரையில் வைத்துக் கொண்டு வந்தார்கள்.


காஃபிர்கள் விழித்துப் பார்த்தபோது ஃகுபைப் றழியல்லாஹு அன்ஹு அவர்களைக் காணவில்லை. உடனே குறைஷிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு எழுபது குதிரை வீரர்கள் விரைவாகச் சென்று ஸுபைர் றழியல்லாஹு அன்ஹு அவர்களை மடக்கிய போது அவர்கள் ஜனாஸாவை தரையில் போட உடனே பூமி பிளந்து அவரை விழுங்கிக் கொண்டது. 


ஸைத் இப்னு தஸின்னா றழியழ்ழாஹு அன்ஹு அவர்களை ஸஃப்வான் இப்னு உமைய்யா விலைக்கு வாங்கி தனது தந்தை உமைய்யா பத்ரில் கொல்லப்பட்டதற்கு பதிலாக அவரைக் கொன்றான். 

முன்னால் கொல்லப்பட்ட ஆஸிம் றழியழ்ழாஹு அன்ஹு அவர்களின் உடலின் ஒரு சில பகுதியையாவது வெட்டி எடுத்து வர குறைஷிகள் சிலரை அனுப்பினர். ஆஸிம் றழியழ்ழாஹு அன்ஹு அவர்கள் குறைஷிகளின் மிக மதிக்கத்தக்க ஒருவரை பத்ரில் கொன்றிந்தார். ஆஸிம் றழியழ்ழாஹு அன்ஹு அவர்களின் உடம்பைப் பாதுகாப்பதற்கு அழ்ழாஹ் ஆண் தேனீக் கூட்டமொன்றை அனுப்பி, வந்தவர்களை விரண்டோடச் செய்தான். “தான் எந்த இணைவைப்பவனையும் தொடமாட்டேன்; எந்த இணைவைப்பவனும் என்னை தொட்டுவிடக் கூடாது” என்று ஆஸிம் றழியழ்ழாஹு அன்ஹு அவர்கள் அழ்ழாஹ்விடம் வேண்டி இருந்தார். அவரின் இந்த வேண்டுதலையும் உறுதியையும் அழ்ழாஹ் நிறைவேற்றினான். இச்செய்தியைக் கேள்விப்பட்ட உமர் இப்னு ஃகத்தாப் றழியழ்ழாஹு அன்ஹு அவர்கள், “அழ்ழாஹ் முஃமினான அடியானை உயிருடன் இருக்கும் போது பாதுகாத்தது போன்று அவரின் மரணத்திற்குப் பின்னும் பாதுகாக்கிறான்” என்று கூறினார்கள்.


ஃகுபைப் இப்னு அதீ

பலீஉல் அர்ழ்

றழியழ்ழாஹு அன்ஹு!


ஆஸிம் இப்னு ஸாபித்

வஹுவல்லதி ஹமத்துஹுத் துபுர் வஹிய ஸுக்கூருன் நஹ்லி மினல் முஷ்ரிக்கீன்

றழியழ்ழாஹு அன்ஹு!


அஸீம் ழாஹிர்

கொழும்பு

Comments

Popular posts from this blog

ஹுதைஃபா இப்னு யமான் றழியழ்ழாஹு அன்ஹு (ஸாஹிபுஸ் ஸிர்)

ஸைத் இப்னு ஸாபித் றழியழ்ழாஹு அன்ஹு

Abdullah Ibnu Mas'ood (RA) அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு