ஸைத் இப்னு ஸாபித் றழியழ்ழாஹு அன்ஹு


 விண்ணிலிருந்து வந்த வஹியை எழுதிய
ஸைத் இப்னு ஸாபித் றழியழ்ழாஹு அன்ஹு


- மதீனாவைச் சேர்ந்தரவர்கள்.

- பத்ரில் கலந்து கொள்ள வீரத்துடன் வாளை உருவிக்கொண்டு வந்தும் பதிமூன்று வயது காரணமாக நபி ஸழ்ழழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் திருப்பி அனுப்பப்பட்டார்கள்.

- உஹதிலும் பக்குவம் போதாமையினால் நபி ஸழ்ழழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் திருப்பி அனுப்பப்பட்டார்கள்.

- ஃகந்தக் யுத்தத்தில்தான் இவர்கள் முதன்முதலில் கலந்துகொண்டார்கள்.

- தபூக்குடைய தினத்தில் பனூ நஜ்ஜார் கோத்திரத்தின் கொடியை ஏந்திக் கொண்டவர்கள்.

- யர்மூக் போரில் கைவரப்பெற்ற செல்வங்களை மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டவர்கள்.

- நன்றாய் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள், புத்திக்கூர்மையுள்ளவர்கள். மனன சக்தியுடன் அழகாய், தெளிவாய், நேர்த்தியுடன் குர்ஆன் ஓதக்கூடியவர்கள். நபி ஸழ்ழழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நேரடியாக இல்ம் படிக்கச் சென்றபோதே குர்ஆனின் பதினேழு அத்தியாயங்களை மனனம் செய்து வைத்திருந்தார்கள்.

- நபி ஸழ்ழழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் குர்ஆனை முழுமையாக மனனம் செய்த நான்கு பேர்களில் ஒருவர்.

- "என்னுடைய சமூகத்தில் பாகப்பிரிவினை, வாரிசுரிமைப் பற்றிய தெள்ளிய அறிவு கொண்டவர் ஸைத்" என்று நபி ஸழ்ழழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவர்களுடைய அறிவின் ஆளுமைக்கு நற்சான்று வழங்கினார்கள்.

- நபி ஸழ்ழழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கட்டளைக்கிணங்க வெறும் பதினான்கு நாட்களில் ஹிப்ரு மொழியையும் பதினேழு நாட்களில் சுர்யானி மொழியையும் கற்றுத் தேர்ந்தார்கள்.

- நபி ஸழ்ழழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இவர்களே அதிகாரபூர்வமான மொழிபெயர்ப்பாளராக ஆகிப்போனார்கள். 

- நபி ஸழ்ழழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மன்னர்களுக்கு அனுப்பிவைத்த கடிதங்களை எழுதும் பணியும் இவர்களுக்கு அமைந்தது.

- நபி ஸழ்ழழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு குர்ஆன் ஆயத்கள் இறங்குகையில் அவற்றை எழுதிய குத்தாபுன் வஹி எனப்படும் வஹியை எழுதியோரில் பிரதானமான ஒருவர்.

- ஒவ்வொரு குர்ஆன் ஆயத்களும் எதற்கு, எந்தச் சந்தர்ப்பத்தில் இறங்குகிறது என்ற விஷய ஞானமும் இவர்களுக்கு இயல்பாய் அமைந்து போனது. 

- நபி ஸழ்ழழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வஃபாத்தானபோது இவர்களுக்கு இருப்பத்தொரு வயதுதான் இருக்கும். ஆனால் முஸ்லிம்கள் மத்தியில் குர்ஆனைப் பற்றிய ஞானமுடையவராகவும், அவ்வசனங்களைப் பற்றிய மிகச்சிறந்த மூலாதார விஷயங்கள் அறிந்தவராகவும் திகழ்ந்தார்கள்.

- நெருக்கடியான காலகட்டங்களில் ஆழமாய்ச் சிந்தித்து சிறப்பான முடிவுகளை எடுத்தவர்கள்.

- யமாமாவுடைய தினத்தில் ஹாபிழ்கள் பலர் கொல்லப்பட்டதால் அபூபக்ர் மற்றும் உமர் இப்னு ஃகத்தாப் றழியழ்ழாஹு அன்ஹுமா ஆகிய இருவரின் வேண்டுக்கோளுக்கிணங்க குர்ஆனை முதன்முதலில் தொகுத்தவர்கள்.

- பேரீச்சம் மட்டையிலும், தோலிலும், கற்பலகைகளிலும், பிராணியின் எலும்புகளிலும், தோழர்களின் இதயத்திலும் வடிக்கப்பெற்றிருந்த குர்ஆனின் ஆயத்களை அலைந்தலைந்து சேகரித்தவர்கள். 

- ஆயத்துடைய ஒவ்வொரு எழுத்தையும் ஒப்பிட்டுச் சரிபார்த்தது; ஆயத்களை அடுத்தடுத்து சரியான வரிசையில் வைத்தது; அந்த ஆயத்களை ஸுறாக்கள்வாரியாய்த் தொகுத்தது என்று அவர் எடுத்தப் பிரயத்தனமெல்லாம் தனியொரு வரலாறு.

- இவர்கள் தொகுத்துச் சமர்ப்பித்த குர்ஆனின் ஒரே பிரதி, அபூபக்ருடைய மரணத்திற்குப்பின் உமர் இப்னு ஃகத்தாப் றழியழ்ழாஹு அன்ஹு அவர்களிடம் வந்துச் சேர்ந்தது. உமரின் மறைவிற்குப்பின் குர்ஆனின் மூலப் பிரதி அவரின் மகளும், நபியவர்களின் மனைவியருள் ஒருவருமான ஹஃப்ஸா பின்த் உமர் றழியழ்ழாஹு அன்ஹா அவர்களிடம் வந்துச் சேர்ந்து பத்திரமடைந்தது.

- உஸ்மான் இப்னு அஃப்பான் றழியழ்ழாஹு அன்ஹு அவர்களின் காலத்தில் சிரியா, ஈராக், ஆர்மேனியா, ஆஜர்பைஜான் போன்ற இடங்களில் வாழ்கின்ற அரபு பேசாத மக்களிடம் குர்ஆன் ஓதும் விடயத்தில் வித்தியாசம் ஏற்பட்டபோது ஹஃப்ஸா பின்த் உமர் றழியழ்ழாஹு அன்ஹா அவர்களிடம் இருந்த குர்ஆனின் மூலப்பிரதியை நகல் எடுக்கும் மாபெரும் பணி நிகழ்ந்தது. நகல் எடுத்த அந்தக் குழுவிற்கு தலைவராகவும் இவர்களே நியமிக்கப்பட்டார்கள். எத்தகைய நவீன அச்சு வசதிகளும் இல்லாத அக்காலத்தில் ஒவ்வொரு எழுத்தையும் பிழையென்று எதுவும் ஏற்பட்டுவிடாமல் பார்த்துப் பார்த்து எழுதவேண்டிய அசகாயப் பணி. போதுமான பிரதிகள் தயாரானவுடன் மூலப்பிரதி அன்னைக்கு திருப்பித் தரப்பட்டு, இப்பொழுது புத்தக வடிவத்தில் ஸுறாக்கள்வாரியாய் எழுதப்பெற்ற குர்ஆன் ஒவ்வொரு பகுதிக்கும் அனுப்பிவைக்கப்பட்டது. அன்று அருளப்பெற்ற அதே துல்லியத்துடன் ஓர் எழுத்துகூட பிழையின்றி இன்று நம் கைகளில் தவழும் குர்ஆன் நூலிற்குப்பின் ஸைத் இப்னு ஸாபித் றழியழ்ழாஹு அன்ஹு அவர்களின் உழைப்பு முதன்மையானது.

- நெருக்கடியான காலகட்டங்களில் அபூபக்ர் றழியழ்ழாஹு அன்ஹு அவர்கள் இவர்களிடம் ஆலோசனை பெறுவார்கள். பாகப்பிரிவினை, வாரிசுரிமை சம்பந்தமான கேள்விகள், பிரச்சனைகள் மக்களிடையே எழும்போதெல்லாம் இவர்களையே நாடுவார்கள். அத்துறையில் அவருக்கு அத்துணை அசாத்தியத் திறமை.

- "யாருக்கெல்லாம் குர்ஆன் சம்பந்தமான கேள்விகள் உள்ளனவோ அவர்களெல்லாம் ஸைத் இப்னு ஸாபித்தை அணுகட்டும்" என்று உமர் இப்னு ஃகத்தாப் றழியழ்ழாஹு அன்ஹு அவர்கள் கூறுவார்கள்.

- உமர் இப்னு ஃகத்தாப் றழியழ்ழாஹு அன்ஹு அவர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் போதெல்லாம் மதீனாவின் நிர்வாகத்தை இவர்களின் பொறுப்பில் விட்டுச் செல்வது வழக்கமாயிருந்தது.

- அபூஹுரைரா, அப்துழ்ழாஹ் இப்னு அப்பாஸ் றழியழ்ழாஹு அன்ஹுமா போன்ற முக்கிய ஸஹாபாக்கள் இவர்களின் மூலமாய் ஹதீஸ்கள் அறிந்து அறிவித்தது ஒருபுறமிருக்க, அப்துழ்ழாஹ் இப்னு அப்பாஸ், அப்துழ்ழாஹ் இப்னு உமர், அபூ ஸஈத் அல் ஃகுத்ரி, அனஸ் இப்னு மாலிக் றழியழ்ழாஹு அன்ஹும் என்று அவரிடம் குர்ஆன் கற்றவர்களின் பட்டியல் மிக நீளம்.

- ஸஹாபாக்கள் மற்றும் தாபிஈன்கள் இவர்கள்மேல் மிகுந்த மதிப்பும், நல்லபிப்ராயமும் கொண்டிருந்தனர்.

- ஸைத் இப்னு ஸாபித் றழியழ்ழாஹு அன்ஹு அவர்களை நல்லடக்கம் செய்துவிட்டு, “இன்றைய தினம் பெரும் அறிஞர் ஒருவர் மரணித்துவிட்டார்” என்று அப்துழ்ழாஹ் இப்னு அப்பாஸ் றழியழ்ழாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். 

- "இந்த உம்மத்தின் பேனா மரணித்துவிட்டது" என்று அபூஹுரைரா றழியழ்ழாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்.


ஸைத் இப்னு ஸாபித்

காத்திபுன் வஹி

றழியழ்ழாஹு அன்ஹு!


அஸீம் ழாஹிர்

கொழும்பு

Comments

Popular posts from this blog

ஹுதைஃபா இப்னு யமான் றழியழ்ழாஹு அன்ஹு (ஸாஹிபுஸ் ஸிர்)

Abdullah Ibnu Mas'ood (RA) அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு