ஃகுஸைமா இப்னு ஸாபித் றழியழ்ழாஹு அன்ஹு
இரண்டு மனிதர்களின் சாட்சிக்கு சமனான
ஃகுஸைமா இப்னு ஸாபித் றழியழ்ழாஹு அன்ஹு
- மதீனாவைச் சேர்ந்தவர்கள்.
- ஆரம்ப காலத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள்.
- பத்ர் ஸஹாபி.
- ஃபத்ஹுடைய நாளில் தன் கோத்திரத்தினரின் கொடியை ஏந்திக் கொண்டிருந்தார்கள்.
- ஸைத் இப்னு ஸாபித் றழியழ்ழாஹு அன்ஹு அவர்கள் குர்ஆனை பிரதி செய்துகொண்டிருக்கையில், ஸுறா அஹ்ஸாபின்,
مِنَ الْمُؤْمِنِيْنَ رِجَالٌ صَدَقُوْا مَا عَاهَدُوا اللّٰهَ عَلَيْهِ فَمِنْهُمْ مَّنْ قَضٰى نَحْبَهٗ وَمِنْهُمْ مَّنْ يَّنْتَظِرُ وَمَا بَدَّلُوْا تَبْدِيْلًا ۙ
என்ற ஆயத்தினை ஃகுஸைமா இப்னு ஸாபித் றழியழ்ழாஹு அன்ஹு அவர்களிடமிருந்தேப் பெற்றார்கள்.
- நபி ஸழ்ழழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு வழக்கின்போது ஃகுஸைமா இப்னு ஸாபித் றழியழ்ழாஹு அன்ஹு அவர்களைப் பார்த்து, "ஷஹாதத்தி ரஜுலைன்"- இரண்டு மனிதர்களின் சாட்சிக்கு சமனானவர் என்று புகழ்ந்தார்கள்.
- நபி ஸழ்ழழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு கிராமப்புற மனிதரிடமிருந்து ஒரு குதிரையை விலைபேசி வாங்கினார்கள். குதிரையின் விலையைக் கொடுப்பதற்காக அம்மனிதரையும் பின்னால் அழைத்துச் சென்றார்கள். நபி ஸழ்ழழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சற்று வேகமாகச் செல்ல கிராமப்புறத்து மனிதர் தாமதித்து விட்டார்.
நபியவர்கள் அக்குதிரையை வாங்கிவிட்டார்கள் என்பதை அறியாத மனிதர்கள் பாதையில் அம்மனிதரை சந்தித்து குதிரைக்கு விலை பேசினார்கள். சிலர் விலையைக் கூட்டியும் பேசினார்கள். அக்கிராமப்புற மனிதர் நபியவர்களைக் கூவி அழைத்து, "நீர் இந்தக் குதிரையை விலைக் கொடுத்து வாங்குவதாக இருந்தால் வாங்கிவிடும். இல்லையெனில் நான் அதை விற்றுவிடப் போகிறேன்" என்று கூறினார்.
நபியவர்கள் நின்றுகொண்டு கிராமப்புற மனிதரின் அழைப்பைக் கேட்டு, "நான் உன்னுடன் விலைப் பேசி வாங்கவில்லையா?" என்று வினவினார்கள். அதற்கு அம்மனிதர், "இல்லை, அழ்ழாஹ்வின் மீது ஆணையாக! நான் உங்களுக்கு விற்கவில்லை" என்று கூறினார். அதற்கு நபி ஸழ்ழழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "அவ்வாறல்ல! நான் உன்னிடம் விலைப் பேசி வாங்கிவிட்டேன்" என்று கூறினார்கள்.
நபி ஸழ்ழழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும், கிராமப்புற மனிதரையும் மனிதர்கள் சூழ்ந்துக் கொண்டார்கள். கிராமப்புற மனிதர், "நான் உங்களுக்கு விற்றேன் என்பதற்கு ஒரு சாட்சியாளரைக் கொண்டு வாரும் பார்க்கலாம்" என்று கூறிக்கொண்டிருந்தார். முஸ்லிம்களில் இருந்து வந்தவர்கள் ஒவ்வொருவரும் கிராமப்புற மனிதரைப் பார்த்து, "உனக்குக் கேடு உண்டாகட்டும்! நபி ஸழ்ழழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உண்மையைத்தான் கூறுவார்கள்" என்று கூறினர்.
ஃகுஸைமா இப்னு ஸாபித் றழியழ்ழாஹு அன்ஹு அவர்கள் வந்து நபியவர்களினதும் கிராமப்புற மனிதரினதும் தர்க்கத்தைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். கிராமப்புற மனிதர், "நான் உங்களுக்கு விற்றுவிட்டேன் என்பதற்கு ஒரு சாட்சியாளைக் கொண்டு வாருங்கள் பார்க்கலாம்" என்று கூறுவதைக் கேட்ட ஃகுஸைமா றழியழ்ழாஹு அன்ஹு அவர்கள், "நீர் அவர்களுக்கு விற்றுவிட்டீர் என்பதற்கு நான் சாட்சி அளிக்கிறேன்" என்று கூறினார்கள்.
உடனே நபி ஸழ்ழழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஃகுஸைமா றழியழ்ழாஹு அன்ஹு அவர்களிடம் முன்னோக்கி வந்து, "எதனை வைத்து நீர் சாட்சி கூறுகிறீர்?" என்று கேட்டார்கள். அதற்கு ஃகுஸைமா றழியழ்ழாஹு அன்ஹு அவர்கள், "அழ்ழாஹ்வின் தூதரே! மறைவான விடயங்களைக் கொண்டு உங்களை உண்மைப்படுத்துவதன் மூலம்தான் நான் சாட்சி கூறுகிறேன்" என்று கூறினார்கள். அப்போது நபி ஸழ்ழழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஃகுஸைமா றழியழ்ழாஹு அன்ஹு அவர்களின் சாட்சியை இரண்டு மனிதர்களுடைய சாட்சிக்கு சமனாக ஆக்கினார்கள்.
[அஹ்மத்/ அபூதாவூத்]
ஃகுஸைமா இப்னு ஸாபித்
ஷஹாதத்தி ரஜுலைன்
றழியழ்ழாஹு அன்ஹு!
அஸீம் ழாஹிர்
கொழும்பு
Comments
Post a Comment